மயானத்திற்கு செல்வத்திற்கு பல வருடங்களாக முறையான சாலை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. பல்வேறு முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கிறது காமராசநல்லூர் கிராமம். இந்த ஊரில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு உயிரிழப்பவர்களை அடக்கும் செய்யும் சுடுகாடு ஊரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
மயானத்திற்கு செல்வத்திற்கு பல வருடங்களாக முறையான சாலை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. பல்வேறு முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் மயானத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் வாய்க்கால்களில் அதிக நீர் ஓடுவதால் மிகுந்த சிரமப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த கிராமத்தில் இருக்கும் வாய்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையே நேற்று கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்காக கழுத்தளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. பாலம் அமைத்து தர 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எந்த பயனும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனியாவது பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.