கார் பேனட்டில் வாலிபரை அடித்து தூக்கி இழுத்து சென்ற SI! காப்பாத்துங்க காப்பாத்துங்க அலறி கூச்சல்! வைரலான வீடியோவால் ஆப்பு!

Published : Sep 18, 2025, 11:55 AM IST
Nellai Police

சுருக்கம்

Nellai Police: நெல்லை மாநகர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன், வாக்குவாதத்திற்குப் பிறகு ஒரு வாலிபரை தனது காரின் பேனட்டில் வைத்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்தவர் காந்தி ராஜன் (59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பேருந்து ஒன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.

உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறியது.

இதனிடையே அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அந்த வாலிபரும், சப்- இன்ஸ்பெக்டரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில்: பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

புகாருக்கு உள்ளான காந்திராஜன் காவல் நிலைய பணியில் இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவருக்கு போக்குவரத்து பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் காரில் பணிக்கு சென்று வந்த நிலையில் தற்போது மது போதையில் வந்து ஒழுங்கினமான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புகாருக்குள்ளான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!