சாத்தான் குளம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து வியாபாரிகளான தந்தை மற்றும் மகனை போலீசார் கடுமையாக தாக்கியதால் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் தகவலில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாத்தான் குளம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து வியாபாரிகளான தந்தை மற்றும் மகனை போலீசார் கடுமையாக தாக்கியதால் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் தகவலில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் கடைகள் என எதுவும் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 19ந் தேதி சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா என்பதை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உறுதி செய்ய வந்துள்ளார். அப்போது ஜெயராஜ் என்பவர் தனது செல்போன் கடையை மூடாமல் திறந்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது கடையை உடனடியாக மூடுமாறு பாலகிருஷ்ணன், ஜெயராஜை கூறியுள்ளார்.
undefined
அப்போது ஜெயராஜ் தான் கடையை அடைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் டென்சன் ஆன எஸ்.ஐ பாலகிருஷ்ணன் என்னலே போலீசையே எதிர்த்து பேசுறீயா என்று மிரட்டியுள்ளார். அதற்கு இல்லை, கடையை அடைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று பதில் தான் சொன்னேன் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த எஸ்.ஐ., வயதானவர் என்றும் பாராமல் ஜெயராஜை சட்டையை பிடித்து இழுத்து தனது பைக்கில் அமர வைத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்.
காவல் நிலையம் சென்ற பிறகும் ஜெயராஜ் – எஸ்.ஐ பாலகிருஷ்ணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயராஜை எஸ்ஐ பாலகிருஷ்ணன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பாலகிருஷ்ணன் தடுக்க கோபம் ஆன எஸ்.ஐ, போலீஸ் ஸ்டேசனில் உள்ள மற்ற காவலர்களையும் அழைத்து ஜெயராஜை, தரையில் படுக்க வைத்து கை கால்களை பிடிக்க வைத்துள்ளார், பிறகு லத்தியால் ஜெயராஜை கடுமையாக தாக்கியுள்ளார். இதற்கிடையே தகவல் அறிந்து ஜெயராஜின் மகன் பெனிக்ஸ் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு தந்தையின் நிலையை பார்த்து கொதித்த பெனிக்ஸ், எஸ்.ஐ பாலகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் டென்சன் ஆன பாலகிருஷ்ணன், அவரையும் பிடித்து கை கால்களை பிடிக்க வைத்து அடித்து உதைத்துள்ளார். சுமார் அரை மணி நேரம் பிரம்பை தண்ணீரில் ஊர வைத்து ஊர வைத்து எஸ்.ஐ பாலகிருஷ்ணன் இருவரையும் மாறி மாறி அடித்துள்ளார். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பெனிக்ஸ் வழக்கறிஞரை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரட்டி அடித்துள்ளனர்.
குப்புற படுக்க வைத்து பிட்டத்தில் அடித்த காரணத்தினால் இருவருக்கும் மூச்சு முட்டியுள்ளது. அதிலும் ஜெயராஜூக்கு ஆசன வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனை அடுத்து அவரை மட்டும் மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு மீண்டும் அவரை காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இரவுப் பணிக்கு எஸ்.ஐ ரகு கணேஷ் வந்துள்ளார். அவரிடம், தந்தை மகன் இருவரும் போலீசாரிடமே தகராறு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.,
இதனால் ரகு கணேஷ் தனது பங்கிற்கு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸை அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் இருவரும் அலற அதை எல்லாம் போலீசார் பொருட்படுத்தவில்லை. பிறகு காலையில் இருவரையும் ரிமான்ட் செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ந் தேதி இரவு மகன் பெனிக்ஸ் உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். பிறகு காலையில் தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார்.
காவல் நிலையத்தில் வைத்து சிறிதும் இரக்கம் இல்லாமல் உதவி ஆய்வாளர்கள் இருவர் செய்த இந்த கொடூர செயல் தான் இரண்டு உயிர்களை பறித்துள்ளது. இதனை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கண்டுகொள்ளவில்லை என்கிற புகாரும் எழுந்துள்ளது. இதற்கிடையே எஸ்.ஐகள் இரண்டு பேரையும் சஸ்பென்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அது போதாது இருவரையும் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.