நீங்காத சோகம்..! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2ம் ஆண்டு நினைவு தினம்..!

By Manikandan S R S  |  First Published May 22, 2020, 3:27 PM IST

தற்போது கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூட தடை நீடிக்கிறது. இதனால் போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஐந்து, ஐந்து பேர்களாக பங்கேற்று  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு அதிகரிப்பதாகவும் அதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கடந்த பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018ம் ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். இதனிடையே போராட்டத்தின் 100வது நாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது.

Latest Videos

undefined

கலவரத்தை தவிர்க்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன், மினிசகாயபுரம் ஸ்நோலின், தாமோதரநகர் மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், அன்னை வேளாங்கன்னிநகர் அந்தோணிசெல்வராஜ், புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மில்லர்புரம் கார்த்திகேயன், திரேஸ்புரம் ஜான்சி, சிவந்தாகுளம் ரோடு கார்த்திக், மாப்பிள்ளையூரணி காளியப்பன், உசிலம்பட்டி ஜெயராமன், சாயர்புரம் செல்வசேகர் என 13 பேர் மரணமடைந்தனர். நீதிகேட்டு போராடிய அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதாக ஆளும் அதிமுக அரசு மீது பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக விசாரணை குழு அமைத்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. 

இதனிடையே தூத்துக்குடியில் அத்துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு நினைவு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். தற்போது கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூட தடை நீடிக்கிறது. இதனால் போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஐந்து, ஐந்து பேர்களாக பங்கேற்று  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

click me!