ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றி நடிகை குஷ்புவுக்கு தெரிய வாய்ப்பில்லை என அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்
தமிழ்நாட்டின் ஆளும் திமுக அரசு கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது. மகளிரிடமும், பிற மாநிலங்களிலும், பொருளாதார நிபுணர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள இத்திட்டத்தை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு, கடுமையான விமர்சித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார். குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றி நடிகை குஷ்புவுக்கு தெரிய வாய்ப்பில்லை என அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இழிவுபடுத்தி பேசியுள்ளார் குஷ்பு. தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் அவருக்கு தெரியாமல் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிய வாய்ப்பில்லை.” என்றார்.
குஜராத்தில் ரூ.450 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது!
பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று குஷ்வு சொல்வதாக கூறிய அமைச்சர் கீதா ஜீவன், “1989இல் சொத்துரிமை, கல்வி உரிமை கொடுத்து பொருளாதார சுதந்திரம் அளித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதனை எதிர்த்து பேச இந்தியாவில் ஒருத்தரும் கிடையாது. அதன் பிறகு தான் இந்திய அளவில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கான உரிமைக்கு அடித்தளமிட்டது திமுக. எந்த மாநிலமும் இந்திய அளவில் அளிக்காத பொருளாதார சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுத்தது திமுக.” என்றார்.
மேலும், “மகளிர் உரிமைத்தொகையான ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நிலை அறியாமல், பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள். எந்த அளவிற்கு இந்த பணம் உபயோகப்படுகிறது என தெரியாமல் பேசி இருக்கிறார் குஷ்பு. ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்.” எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.