இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர்..! தாயின் ஊக்கத்துடன் சாதித்த தமிழ்நாட்டு மகள்..!

By Manikandan S R S  |  First Published Dec 3, 2019, 3:56 PM IST

நாட்டிலேயே முதல் திருநங்கை செவிலியராக தமிழகத்தைச் சேர்ந்த அன்பு ரூபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடத்தைச் சேர்ந்தவர் ரத்ன பாண்டி. இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் அன்புராஜ். சிறுவயதில் இருந்தே பெண் தன்மையை உணர்ந்த அன்பு ராஜ் நாளடைவில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாற்றங்களை சந்தித்துள்ளார். இதனால் மருத்துவ உதவிகளுடன் திருநங்கையாக மாறி தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக்கொண்டார். உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தில் உள்ளவர்கள் என அனைவரும் புறக்கணித்த போதும், அன்பு ரூபிக்கு ஆதரவாக அவரது தாய் தேன்மொழி விளங்கி வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதன்காரணமாக நன்றாக படித்து பள்ளிக்கல்வியை முடித்த அவர், திருநெல்வேலியில் இருக்கும் நர்சிங் கல்லூரியில் பட்டபடிப்பிற்காக சேர்ந்தார். கல்லூரியிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று தனது தாய்க்கு பெருமை சேர்ந்தார். இந்தநிலையில் எந்த ஊரில் சமூகத்தின் கேலிகிண்டலுக்கு ஆளானாரோ அதே ஊரில் அவருக்கு செவிலியர் பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அவருக்கான பணிநியமன ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்தார். 

கடும் உழைப்பின் மூலமாக நாட்டிலேயே முதல் திருநங்கை செவிலியராக அன்பு ரூபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவரது தாய் தேன்மொழி, மாற்று பாலினத்தவர்களை சமூகம் ஒருபோதும் புறக்கணிக்க கூடாது என்றார். மேலும் தனது மகன் மகளாக மாறியிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருக்கிறார்.

click me!