
திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள பெரியமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது கால்நடைகளைப் பராமரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார். கண்ணனிடம் சில மாடுகள் உள்ளன, அவற்றை அவர் அணையை ஒட்டிய வனப்பகுதியிலும், சமவெளி பகுதிகளிலும் மேய்ப்பது வழக்கம்.
இளைஞரை இழுத்து சென்ற முதலை
இந்நிலையில், இன்று கல்லூரி மாணவரான கண்ணனின் மகன் முனீஸ் (18) விடுமுறை தினம் என்பதால் மாடுகளை மேய்க்க அணைக்கு அருகிலுள்ள புல்வெளிக்கு அழைத்துச் சென்றார். மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகு, களைப்பால் சோர்ந்த முனீஸ், முகம் மற்றும் கைகால்களைக் கழுவுவதற்காக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்குச் சென்றார். அப்போது, நீரில் மறைந்திருந்த முதலை ஒன்று முனீஸைத் தாக்கி, நீருக்குள் இழுத்துச் சென்றது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூச்சுத் திணறி முனீஸ் உயிரிழந்தார்.
பிணமாக மீட்பு
மகன் வழக்கமாக உணவு நேரத்திற்கு வீடு திரும்பாததால் கவலைப்பட்ட கண்ணன், அவரைத் தேடி அணைப் பகுதிக்குச் சென்றார். அங்கு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தாலும், முனீஸைக் காணவில்லை. அப்போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அது தனது மகன் முனீஸின் உடல் என்பதை அறிந்து கதறினார்.
முதலை மனிதர்களை தாக்குமா?
இதையடுத்து, கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில், முனீஸ் நீரில் முகம் கழுவ இறங்கியபோது முதலை தாக்கியதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. பின்னர், காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரியமலை கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, முதலைகள் மனிதர்களைத் தாக்குவது அரிதான விஷயமாகும். அணையில் கை, கால் கழுவ சென்ற முனீஸை விலங்குகள் என நினைத்து முதலை தாக்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.