திருவண்ணாமலை அருகே இரு மனைவிகளையும் ஊராட்சி தலைவர் பதவி தேர்தலில் நிறுத்தி முன்னாள் தலைவர் ஒருவர் வெற்றி பெற வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
undefined
விடிய விடிய நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை தற்போது வரை தொடர்கிறது. ஆளும் கட்சியான அதிமுகவிற்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் கடும் இழுபறி இருந்த நிலையில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனது இரு மனைவிகளையும் தேர்தலில் நிறுத்தி ஊராட்சி தலைவிகளாக வெற்றி பெற வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்டது வழூர்-அகரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருக்கு செல்வி,காஞ்சனா என இரண்டு மனைவிகள். விவசாயியான இவர் அந்த பகுதியின் ஊராட்சி தலைவராக இருந்திருக்கிறார். தற்போது அங்கு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தமுறை தனது மனைவிகள் இருவரையும் போட்டியிடவைக்க முடிவு செய்தார். அதன்படி செல்வி தனசேகரனை வழூர் கிராம தலைவர் பதவிக்கும் காஞ்சனா தனசேகரனை கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கும் போட்டியிட வைத்தார்.
சுயேட்சையாக போட்டியிட்ட இருவரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேரும் தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.