திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது 'மகாதீபம்'..! ஆனந்தக் கூத்தாடி அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு தரிசனம்..!

By Manikandan S R S  |  First Published Dec 10, 2019, 6:00 PM IST

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த கூத்தாடியடி சந்ததியில் இருந்து வெளி வந்தார். அப்போது சரியாக 6 மணியளவில் சுவாமி சன்னதி முன் இருக்கும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் பக்தர்களின் சரண கோஷத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. 


சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு மலையே சிவனாக வணங்கப்படுகிறது. விஷ்ணுவிற்கும் பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்கிற அகந்தை ஏற்படவே, அதைப்போக்குவதற்காக திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத ஜோதி பிழம்பாக ஈசன் காட்சியளித்தார் என புராணங்கள் கூறுகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த வைபவம் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெறும். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன்,சண்டிகேஸ்வரர் ஆகியோர் விதவிதமான அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை 6 மணியளவில் மலை மேல் ஏற்றப்பட்டது. இதற்காக மாலை 5 மணிக்கு முன்பாக பஞ்ச மூர்த்திகள் சுவாமி சன்னதி முன்பு அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த கூத்தாடியடி சந்ததியில் இருந்து வெளி வந்தார். அப்போது சரியாக 6 மணியளவில் சுவாமி சன்னதி முன் இருக்கும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் பக்தர்களின் சரண கோஷத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்றவாறு மலையே சிவனாக ஏற்றப்பட்ட தீபத்தை வணங்கினர். முன்னதாக அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் திருவண்ணாமலையில் இருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் தீபங்கள் ஏற்றி வழிபட தொடங்கினர். இதனால் திருவண்ணாமலை நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. மகாதீபத்தை காண லட்சணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு பெறுகிறது.

தீபத்திருவிழாவிற்காக திருவண்ணாமலை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் தீப திருவிழாவுடன் நாளை பௌர்ணமியும் சேர்ந்து வருவதனால் இது சிறப்பு மிகுந்த நிகழ்வாக சிவ பக்தர்களால் கருதப்படுகிறது.

click me!