திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1086 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1086 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிலிருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. ஆனால், மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவே அது கட்டுப்பட்டது. அதன்பிறகு, கோயம்பேடு மார்க்கெட் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவியது. தற்போது அதிகபட்சமாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 56,845ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1254 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது திருவண்ணாமலையும் உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1086 ஆக உயர்வடைந்தது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பூஜை குருக்களாக இருக்கும் முக்கிய சிவாச்சாரியார் ஒருவருக்கு கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. கோயிலின் முக்கிய குருக்களான அவர் அரசியல் மற்றும் தொழில் அதிபர்களுக்கு மிக வேண்டப்பட்டவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனது மகனின் மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் ஒரு திருமண விழாவிற்காக சென்று வந்த நிலையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.