சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். விழா நாட்களிலும் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மேலும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை நீடிக்கின்றது. இந்த சூழலில், சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் கந்தசாமி கூறுகையில் பல நாட்களாக ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த திருவண்ணாமலை தற்போது சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், சித்ரா பவுர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். வெளியூர் மக்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் நடைபெறும். ஆனால், பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.