ஆரணி அருகே அரையாண்டு தேர்வில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவி ஒருவர் ஒருநாள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கிறது நெசல் கிராமம். இங்கு 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கும் வெங்கடேசன் என்பவர் பள்ளியில் மாணவ மாணவிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அண்மையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளில் ஒருவர் ஒரு தலைமையாசிராக பணியமர்த்தப்படுவார் என்று அறிவித்திருந்தார். அதன்படி 10 ம் வகுப்பு பயிலும் மதுமிதா என்னும் மாணவி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வந்தார். இதையடுத்து அவரை கடந்த திங்கள்கிழமை அன்று 'ஒரு நாள் தலைமையாசிரியராக' நியமித்து வெங்கடேசன் உத்தரவிட்டார். பள்ளிக்கு வருகை தந்த மாணவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதையை பெற்றுக்கொண்டார். பின் அவரை வெங்கடேசனும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அவர்கள் தலைமையாசிரியரின் செயல்பாடுகள் குறித்து மதுமிதாவிற்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து அவர் பள்ளியின் முக்கிய கோப்புகளை பார்வையிட்டார்.
undefined
ஆசிரியர்களிடம் கலந்தாய்வு நடத்திவிட்டு ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு நடத்தினார். வகுப்பறையில் மாணவ மாணவிகளிடம் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர். ஒருநாள் தலைமையாசிரியராக மாணவி ஒருவர் செயல்பட்டது பிற மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.