திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று நடைபெற்ற ஆடிப்பூர திருவிழாவின் போது தேரில் இருந்து தவறி விழுந்து தலைமை குருக்கள் முரளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று நடைபெற்ற ஆடிப்பூர திருவிழாவின் போது தேரில் இருந்து தவறி விழுந்து தலைமை குருக்கள் முரளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோவிலின் ஆழித் தேரானது ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப் பெரிய தேராகும். இந்நிலையில், ஆடிப்பூர விழாவானது கடந்த 24-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு கமலாம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். “ஆரூரா தியாகேசா” என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம்பிடித்தனர்.
பின்னர், தேர் இரவு நிலைக்கு வந்தவுடன் தீபாராதனை செய்வதற்காக கோயில் தலைமைக் குருக்கள் முரளி (56) தேர் மீது ஏறினார். அப்போது நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெளியேறியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் முரளி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு முரளி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆடிப்பூர திருவிழாவின் போது உயிரிழந்த சிவாச்சாரியார் முரளிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.