தண்ணீர் வீணாக சாலையில் செல்வதை கண்டு ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் வித்யாசமான போராட்டத்தில் இறங்கி உள்ளார். சாலையில் வீணாகும் தண்ணீரில் பேன்ட் சட்டையுடன் இறங்கி கையில் ஒரு கப்பை வைத்து தண்ணீரை எடுத்து நடு சாலையில் குளித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் அப்பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். திருப்பூர் அவினாசி சாலையில் இருக்கும் ஒரு குடிநீர் குழாய் உடைந்து தினமும் ஏராளமான தண்ணீர் சாலையில் வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தண்ணீர் வீணாக சாலையில் செல்வதை கண்டு ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் வித்யாசமான போராட்டத்தில் இறங்கி உள்ளார். சாலையில் வீணாகும் தண்ணீரில் பேன்ட் சட்டையுடன் இறங்கி அவர் கையில் ஒரு கப்பை வைத்து தண்ணீரை எடுத்து நடு சாலையில் குளித்துள்ளார். மேலும் ஷாம்பு தேய்த்தும் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சந்திரசேகர் நடு சாலையில் குறித்து போராட்டம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சந்திரசேகரின் இந்தப்போராட்டத்தால் மாநகராட்சி அதிகாரிகள் மிரட்சி அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.