பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால் விதவிதமான பரிசுகள்..! மாவட்ட ஆட்சியரின் அதிரடி திட்டம்..!

By Manikandan S R SFirst Published Nov 15, 2019, 1:40 PM IST
Highlights


திருப்பூர் மாவட்டத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை ஆட்சியர் செயல்படுத்தி இருக்கிறார்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுசூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு அரசும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பை, கப்புகள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்தியா முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த காந்தி ஜெயந்தி முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி பள்ளி மாணவ மாணவிகள் பழைய பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தால் அவர்களுக்கு பரிசு வழங்கும் சிறப்பு திட்டத்தை ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செயல்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள் கொண்டு வந்து கொடுத்தால் அவர்களுக்கு பரிசாக நோட்டு, பேனா, புத்தகம் போன்ற பயனுள்ள பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதற்கான துவக்க விழா திருப்பூர் அரசு பெண்கள் மாநகராட்சி மேல்நிலைய பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் மாணவர்களுக்கு எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக வழங்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். திருப்பூரில் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்த இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!

click me!