திருப்பூரில் வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த 40 லட்சத்தில் சொத்துக்கள் வாங்கிக் குவித்த தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூரில் இருக்கும் கார்ப்பரேஷன் வங்கி மூலம் ஒருவர் 40 லட்சம் பணப்பரிமாற்றம் செய்த போது தவறுதலாக அது வேறொருவரின் வங்கிக்கணக்கிற்கு சென்றிருக்கிறது. வங்கி மூலமாக விசாரணை செய்ததில் அந்த கணக்கு திருப்பூரைச் சேர்ந்த குணசேகரன்(50 ) என்பவருடையது என்று தெரிய வந்தது.
இதனால் வங்கி அதிகாரிகள் குணசேகரனை தொடர்பு கொண்டு 40 லட்சத்தை திருப்பி செலுத்துமாறு கூறியின்றனர். ஆனால் அவர் பணத்தைக் கொடுக்காமல் தாமதப்படுத்தி இருக்கிறார். இதனால் வங்கி சார்பாக திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் புகாரின் அடிப்படையில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் 40 லட்சத்தை பயன்படுத்தி மனைவி ராதாவுடன் சேர்ந்து சொத்துக்களை வாங்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து கணவன்,மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறை சிறையில் அடைந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கணவன் மனைவியான குணசேகரன், ராதா ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.