உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி வழங்க கோரி நூதன வேண்டுதலில் ஈடுபட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது
சனாதன ஒழிப்பு பற்றி தொடர்ச்சியாக பேசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு நல்ல புத்தி வழங்க கோரி பல்லடத்தில் பாரத மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் பாரத மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு ஆகியோர் இணைந்து சமத்துவ விநாயகர் சிலையினை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
சிறப்பு பூஜைகளோடு தொடங்கப்பட்ட சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான வியாபாரிகள், மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
அப்போது, சனாதன தர்மத்திற்கு எதிராகவும் சனாதனத்தை ஒழிப்போம் என பேசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோருக்கும், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் நல்ல புத்தி கோரி வேண்டுதல் வைத்து விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாடு நடத்தினர்.
பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்வு: பக்தர்கள் அதிருப்தி!
சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ச்சியாக பேசி வருவது இந்து தர்மத்திற்கு எதிரானது எனக்கூறி விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.