பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர்,ஒரு காவலர் மற்றும் ஒரு வீடியோ கிராபருடன் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் காரையும் கண்காணிப்பு நிலைக்குழவினர் வாகன சோதனைக்காக நிறுத்தினர். ஆனால், காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
பாஜகவினருக்கு அதிகார போதை: டி.ஆர்.பி.ராஜா சாடல்
திருப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, அவர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், குன்னத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.