ஆம்புலன்சின் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்து சைரன் போட்டுக்கொண்டு அசுர வேகத்தில் பயணத்தை தொடங்கிய ஓட்டுநர் ஆகாஷ், 90 கிலோமீட்டர் தூரத்தை சரியாக 1 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகன் சந்தோஷ்(3). கணவரை பிரிந்திருக்கும் சங்கீதா மகனுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவன் சந்தோஷிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளக்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டான். இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
undefined
உடனடியாக சிறுவனை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். வெள்ளக்கோவிலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸை ஆகாஷ் என்கிற 21 வயது இளைஞர் ஓட்டினார். இரவு 7 மணியளவில் வெள்ளக்கோவிலில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் அசுர வேகத்தில் சென்று இரவு 8.10 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையை அடைந்தது. அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறான்.
பொதுவாக வெள்ளக்கோவிலில் இருந்து கோவைக்கு வர இரண்டு மணி நேரத்திற்கும் மேலே ஆகும். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆம்புலன்சின் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்து சைரன் போட்டுக்கொண்டு அசுர வேகத்தில் பயணத்தை தொடங்கிய ஓட்டுநர் ஆகாஷ், 90 கிலோமீட்டர் தூரத்தை சரியாக 1 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு வந்ததும் சிறுவனை ஓட்டுநர் கைகளில் தூக்கிச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இரவு நேரம் என்பதால் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும், ஆனாலும் சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு சிரமத்தை பார்க்காமல் சென்றாக கூறியுள்ளார்.
ஆபத்தான கட்டத்தில் ஒரு உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸை ஓட்டிய ஆகாஷை அனைவரும் பெரிதும் பாராட்டினார். இந்த செய்திகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.