திருப்பூர் அருகே 13 வயது சிறுமி கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
திருப்பூர் அருகே இருக்கும் புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமணியன்(67). முதியவரான இவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இவரின் வீட்டின் எதிரே பின்னலாடை நிறுவனம் ஒன்று இருக்கிறது. இரவு நேரத்தில் காற்று வாங்குவதற்காக அந்நிறுவனத்தின் வாசலில் சென்று காந்திமணியன் அமர்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
undefined
சம்பவத்தன்றும் இரவு அவ்வாறு அமர்ந்துள்ளார். அப்போது அந்த தெருவில் ஒரு கார் தாறுமாறான வேகத்தில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தெருவோரம் அமர்ந்திருந்த முதியவர் காந்திமணியன் மீது அந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காரை ஒட்டிய ஓட்டுனரை பிடித்த போது தான் தெரிந்தது அது பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 13 வயது சிறுமி என்பது. அவரது உறவினர் ஒருவரின் உதவியுடன் சிறுமி கார் ஓட்டி படிக்கும்போது தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. முதியவரின் சிகிச்சைக்கான செலவை சிறுமியின் குடும்பத்தினர் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததால் காவல்துறையில் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே கார் விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.