46 ஆயிரம் செல்லாத நோட்டுகளுடன் கலங்கிய மூதாட்டிகள்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்..!

Published : Nov 29, 2019, 04:06 PM ISTUpdated : Nov 29, 2019, 04:23 PM IST
46 ஆயிரம் செல்லாத நோட்டுகளுடன் கலங்கிய மூதாட்டிகள்..! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்..!

சுருக்கம்

மூதாட்டிகள் வைத்திருக்கும் செல்லாத 46 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற வழியில்லை என்று ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருக்கிறார். இரண்டு பேருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை அரசு வழங்கும் என்றும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது பூமலூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ரங்கம்மாள்(75), தங்கம்மாள்(78). இருவரும் சகோதரிகள். இருவரது கணவரும் சில ஆண்டுகளுக்கு முன் மரணடைந்து விட்டனர். இதனால் தங்களது மகன்கள் வீட்டில் மூதாட்டிகள் இரண்டு பேரும் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இருவருக்கும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் அவ்வப்போது மகன்களுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனிடையே மேல்சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. மகன்களிடம் பெரிய அளவில் பணம் இல்லாமல் தவித்துள்ளனர். அப்போது தான் மூதாட்டி இருவரும் தாங்கள் பணம் சேர்த்து வைத்திருப்பதாக கூறியிருக்கின்றனர். அதை எடுத்து வந்து கொடுத்தபோது மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2016 ம் ஆண்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்த 500 ,1000 ரூபாய் நோட்டுகளை மூதாட்டிகள் சேர்த்து வைத்திருந்தனர். ரங்கம்மாள் 24 ஆயிரமும், தங்கம்மாள் 22 ஆயிரம் என 46 ஆயிரம் ரூபாயை செல்லாத நோட்டுகள் என அறியாமல் இரண்டு பேரும் பாதுகாத்து வைத்துள்ளனர். மகன்கள் அவர்களிடம் இந்த நோட்டுகள் செல்லாது என்று கூறிய போது இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பல ஆண்டுகளாக சிறு சிறுக பேரன், பேத்திகளுக்காகவும் தங்களது இறுதிச்சடங்குகளுக்காகவும் சேர்த்து வைந்திருதாகவும், அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விபரம் தங்களுக்கு தெரியாது என்று கூறி வேதனை அடைந்தனர்.

இதுதொடர்பான செய்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதைப்பார்த்து பலரும் வயதான மூதாட்டிகள் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த செய்தி சென்றது. மூதாட்டிகள் வைத்திருக்கும் செல்லாத 46 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற வழியில்லை என்று ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருக்கிறார். இரண்டு பேருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை அரசு வழங்கும் என்றும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!