பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், அதை பற்றி அறியாமல் மூதாட்டிகள் இரண்டு பேர் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை சேமித்து வைத்திருந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது பூமலூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ரங்கம்மாள்(75), தங்கம்மாள்(78). இருவரும் சகோதரிகள். இருவரது கணவரும் சில ஆண்டுகளுக்கு முன் மரணடைந்து விட்டனர். இதனால் தங்களது மகன்கள் வீட்டில் மூதாட்டிகள் இரண்டு பேரும் வசித்து வருகின்றனர்.
undefined
இந்த நிலையில் இருவருக்கும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் அவ்வப்போது மகன்களுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனிடையே மேல்சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. மகன்கள் பெரிய அளவில் பணம் இல்லாமல் தவித்துள்ளனர். அப்போது தான் மூதாட்டி இருவரும் தாங்கள் பணம் சேர்த்து வைத்திருப்பதாக கூறியிருக்கின்றனர். அதை எடுத்து வந்து கொடுத்தபோது மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2016 ம் ஆண்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்த 500 ,1000 ரூபாய் நோட்டுகளை மூதாட்டிகள் சேர்த்து வைத்திருந்தனர். ரங்கம்மாள் 24 ஆயிரமும், தங்கம்மாள் 22 ஆயிரம் என 46 ஆயிரம் ரூபாயை செல்லாத நோட்டுகள் என அறியாமல் இரண்டு பேரும் பாதுகாத்து வைத்துள்ளனர். மகன்கள் அவர்களிடம் இந்த நோட்டுகள் செல்லாது என்று கூறிய போது இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பல ஆண்டுகளாக சிறு சிறுக பேரன், பேத்திகளுக்காக சேர்த்து வைத்திருப்பதாகவும், அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விபரம் தங்களுக்கு தெரியாது என்று கூறி வேதனை அடைந்தனர்.
பணமதிப்பிழப்பு முடிந்த 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வயதானவர்கள் இது போன்று செல்லாத நோட்டுகளை தெரியாமல் வைத்திருப்பது தொடர்கதை ஆகி வருகிறது.