திருப்பூர் அருகே 82 வயதில் மூதாட்டி ஒருவர் சுயேச்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களிலும் ஊராட்சி பதவிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தது.
இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நீடித்து வந்தநிலையில் தற்போது திமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவியில் 270 இடங்களில் திமுக கூட்டணியும் 239 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன. ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2323 இடங்களில் திமுக கூட்டணியும் 2183 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலை வகிக்கிறது. தினகரனின் அமமுக 95 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளது. சுயேட்சைகள் 434 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து முடிவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்தநிலையில் திருப்பூர் அருகே 82 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு விசாலாட்சி என்கிற 82 வயது மூதாட்டி சுயேச்சையாக போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே அவர் முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவரது வெற்றியை ஆதரவாளர்கள், குடும்பத்தினர் என ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர்.