திருப்பூரில் கஞ்சா விற்ற 5 சிறுவர்களுக்கு நூதன தண்டனையாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு 30 நாட்கள் சேவை செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சிறுவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த வாரணாசிபாளையம் குருவாயூரப்பன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 சிறுவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த சிறுவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் வாரணாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த அம்சவரதன் (வயது 23) என்ற நபர் கஞ்சா விற்பனை செய்வதுடன், சிறுவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. மேலும் சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் அம்சவரதனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதையும், மேலும் அவர் 16 வயதுடைய 2 பேர் மற்றும் 17 வயதுடைய 3 பேர் உள்ளிட்ட 5 சிறுவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதையும் ஒப்புக் கொண்டார்.
undefined
இதனைத் தொடர்ந்து அம்சவரதனை கைது செய்த காவல் துறையினர், அவரை அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அம்சவரதன் மீது ஏற்கனவே பெருமாநல்லூர், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 5 சிறுவர்களையும் காவல் துறைர் இளம்சிறார் நீதிமன்ற குழுமத்தில் நீதிபதி சித்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
கிணறு வெட்டும்போது வெடி விபத்து; 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
அப்போது குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரில் 2 சிறுவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையிலும், 3 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 30 நாட்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி சித்திக் உத்தரவு பிறப்பித்தார். திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நீதிபதி நூதன தீர்ப்பு வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.