வெள்ளக்கோவிலில் 4 வயது குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி சந்திகா. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் தமிழினி என்கிற மகளும் இருந்துள்ளனர். முனியப்பன் பெயிண்ட்டராக வேலை பார்த்து வருகிறார். சந்திகா அங்கிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சந்திகா வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டின் அருகே இருக்கும் ஒரு கட்டிடத்தில் பெயிண்ட் அடிப்பதற்காக முனியப்பன் சென்றுள்ளார்.
undefined
மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த குழந்தை தமிழினி தந்தையை பார்ப்பதற்கு அந்த கட்டிடத்திற்கு சென்றுள்ளது. குழந்தையிடம் வீட்டிற்கு செல்லுமாறும் வரும்போது தான் மிட்டாய் வாங்கி வருவதாகவும் முனியப்பன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தமிழினி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.பல இடங்களில் தேடி பார்த்தும் சிறுமியை காணாததால் வேலை பார்த்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த தண்ணீர் தொட்டியை அவர் தற்செயலாக எட்டிப்பார்த்த போது குழந்தை தமிழினி உள்ளே கிடந்தாள்.
7 அடி ஆழமிருந்த தொட்டியில் 2 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. மயங்கிய நிலையில் இருந்த தமிழினியை மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்கு முனியப்பன் கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி துடித்தார். காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.