கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பகலில் தர்ணா; இரவில் தற்கொலை - இளம் பெண்ணின் பெற்றோர் கதறல்

By Velmurugan s  |  First Published Aug 10, 2023, 9:45 AM IST

பாவூர்சத்திரம் அருகே காவல்துறையில் பணிபுரியும் கணவரின் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று காலையில் விரக்தியில் அப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வ உ சி நகரைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகள்  குமுதா(வயது 23) என்பவருக்கும், ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரது மகன் சுதர்சன் (29) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. சுதர்சன் தற்பொழுது சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் 

இந்நிலையில் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சென்னைக்கு சென்று வீடு பார்த்துவிட்டு பின்பு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் குமுதா தொலைபேசி வாயிலாக அழைத்த பொழுது அதனை சுதர்சன்  நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சுதர்சன் குமுதாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு

இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுதர்சனின் பேச்சைக் கேட்டே இருந்துள்ளனர். தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால், குமுதா வேதனையடைந்துள்ளார். மீண்டும் தன்னை அழைத்துச் செல்வார் என்ற ஏக்கத்தில் தனது தாய் வீடான கல்லூரணியில் இருந்த குமுதா ஒரு கட்டத்தில் நேற்று இரவில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருந்ததை அறிந்து  தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டு வாயிலில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

தர்ணாவில் இருந்த குமுதாவிடம் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தால்  ராயப்பநாடானூரில் பெரும்  பரபரப்பு நிலவியது. குமுதா தர்ணாவில் இருந்ததை அறிந்து சுதர்சன் சுதாரித்துக் கொண்டு வீட்டிற்கு வராமலே இருந்துள்ளார். பாவூர்சத்திரம் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குமுதா நீண்ட நேரம் சுதர்சனின் வீட்டு வாயிலில் இருந்தபொழுதும் அவரது  தாய், தந்தை வீட்டை பூட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. 

குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பேருந்தில் சொருகியவரால் பரபரப்பு - சிசிடிவியில் பதிவான காட்சிகள்

பின்னர் குமுதா தனது தாய் வீட்டிற்கு இரவில் சென்ற நிலையில் இன்று காலையில் சுதர்சன் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து குமுதாவை அழைத்து  கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த குமுதா காலை 8 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குமுதா மீது ஏற்கனவே சுதர்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அதில் குமுதாவிற்கு மனநிலை சரியில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு குமுதா உறவினர்களும் சுதர்சன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பல கட்டமாக விசாரணையில் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் உடன்படாததால் நேற்று இரவில் குமுதா தர்ணாவில் ஈடுபட  காரணம் என்றும் தெரியவந்துள்ளது. தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!