கடையநல்லூர் அருகே பேருந்திற்கு காத்திருந்த பயணிகள் மீது போலீஸ் வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே இருக்கிறது சொக்கம்பட்டி கிராமம். இங்கு 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து தென்காசி, கடையநல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி இருக்கிறது.
இதனிடேயே பயணிகள் சிலர் தென்காசி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியாக போலீஸ் பாதுகாப்பிற்கு செல்லும் வேன் ஒன்று வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்த பயணிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் பலத்த காயமடைந்து பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவலர்கள் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு போலீஸ் வேனின் ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருகிறது.