நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சினேகாவை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்றும் இவர்களுக்கு உள்ளது.
சினேகா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அவரது கணவர் கண்டித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சினேகா சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று சினேகா மற்றும் குழந்தையுடன் மைக்கில் மதன் சிங் தனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சினேகா போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல் மதன் சிங் மனைவியிடம் இருந்து போனை பிடுங்கி ஆவேசமாக உடைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சினேகா, அங்கிருந்து கிளம்பி தனது வீட்டுக்கு வந்து அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டுக் கொண்டார். அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சினேகாவை தூக்கில் இருந்து இறக்கி பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் சினேகாவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, சினேகாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சினேகாவை மைக்கேல் மதன் சிங் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், இன்றும் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
இதனை அடுத்து போலீசார் மைக்கேல் மதன் சிங்கை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து சேர்மாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து சினேகாவின் உறவினர்கள் மற்றும் தாய் தந்தையரிடம் விசாரணை நடத்தினார்.
இறந்த சினேகாவின் உடலில் காயம் இல்லை. தூக்கிட்டுக் கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சினேகா செல்போன் உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது கணவர் கொலை செய்ததாரா ? என்பது குறித்து பணகுடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.