தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழையின் அடிப்படையில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குறிப்பதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். மேலும் சுற்றுலாப் பயணிகளை நம்பி அப்பகுதியில் வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டு சுற்றலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சுற்றுலாப்பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பழைய குற்றாலம் அருவிக்கு வரும் வாகனங்கள் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு அவர்கள் நடந்து செல்லும் சூழல் உள்ளது.
undefined
மேலும் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் இரவு உள்பட 24 மணிநேரமும் நீராட அனுமதி உள்ளது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் மாலை 5.30 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இதனால் மாலை நேரத்தில் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. 3 மாதங்கள் மட்டுமே தண்ணீர் வரும் என்பதால் அந்த சீசனை நம்பி பலரும் அங்கு கடை நடத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளால் பழைய குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் எங்கள் வியாபாரமும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இட நெருக்கடியை காரணம் காட்டி சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சுமார் 1 கி.மீ. முன்னதாகவே நிறுத்தப்பட்டாலும், அரசு சார்பில் அருவிக்கு அருகில் செல்லும் வகையில் வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்திலும் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.