தாய்ப்பாலுக்கு நிகராக கொரோனாவை கொல்லும்.. தடை செய்யாதீங்க..! கள் விற்பனைக்கு வலுக்கும் கோரிக்கை..!

By Manikandan S R SFirst Published Apr 27, 2020, 11:06 AM IST
Highlights

தாய்ப்பாலுக்கு நிகராக கள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது எனவும் கொரோனா தொற்று தாக்காமல் இருக்கவும், தாக்கப்பட்டவர் மீளவும் உதவ தாய்ப்பாலுக்கு நிகரான கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

அண்மையில் தென்கொரியாவில் பிறந்து 27 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்படவே அதை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கொரோனாவிற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் 3 வாரங்களாக தாய்ப்பால் மட்டுமே அருந்திய அக்குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. இதையடுத்து தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு அதிகம் இருந்ததாலேயே கொரோனாவில் இருந்து குழந்தை மீண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தாய்ப்பாலுக்கு நிகராக கள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது எனவும் கொரோனா தொற்று தாக்காமல் இருக்கவும், தாக்கப்பட்டவர் மீளவும் உதவ தாய்ப்பாலுக்கு நிகரான கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கூறும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகெங்கிலும் பரவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை இந்நோய் தாக்குவது இல்லை. அப்படியே தாக்கினாலும் இவர்கள் விரைவில் குணமடைந்து விடுகிறார்கள். கள் தமிழ் மண்ணில் மென்பானம். இது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நிறைந்திருக்கும் உணவு. இது தாய்ப்பாலுக்கு நிகரானது. மருத்துவ குணம் கொண்டது. கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை (Right to Food). மேலும் இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்கவும் பருகவும் தடை உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா நோய் மக்களை தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கள் நுகர்வு காலத்தின் கட்டாயம். கள்ளை நொதிக்க வைத்து கை கழுவுவதற்கு தேவையான இயற்கையான சானிடைசர் தயாரிக்க வேண்டியதும் அவசியம். பனைகளிலிருந்து கள் இறக்க ஏற்ற பருவம் இது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை உடனடியாக நீக்கி அறிவிக்க அரசு முன்வர வேண்டும். இந்த கள் விடுதலையை கள் இயக்கம் வரவேற்கும். இதற்கு எதிர்ப்புகள் வந்தால் இயக்கம் முன்னின்று எளிதாக முறியடிக்கும். இது உறுதி. கள் விடுதலை மக்களுக்குக் காலத்தினால் அரசு செய்யும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

click me!