சுடுகாடும் கல்லறையும் மூடப்பட்டால் முஸ்லிம்களின் மையவாடிகள் திறக்கும்..! நேசக்கரம் நீட்டும் எஸ்டிபிஐ..!

By Manikandan S R S  |  First Published Apr 24, 2020, 11:15 AM IST

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களை முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யலாம் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச. உமர்பாரூக் தெரிவித்திருக்கிறார்.


உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 23,077 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 718 பேர் பலியாகி இருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் வைரஸ் நோய்க்கு தாக்குபிடிக்க முடியாமால் பலர் பலியாகும் நிலையில் அரசு விதிகளின்படி அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Latest Videos

undefined

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடலை பொது மயனாங்களில் அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் செய்திகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அண்மையில் சென்னையில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவருக்கும் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தார்.  அவரது உடலை உறவினர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சென்னை அண்ணா நகர் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் வன்முறையில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் தாக்கினர். இதற்கு முன்பாகவும் ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவிற்கு பலியாக அவரது உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்பு நிலவியது. இச்சம்பவங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதையடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழக முதல்வரும் காவல்துறையும் எச்சரித்தனர்.

இந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களை முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யலாம் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச. உமர்பாரூக் தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சுடுகாட்டிலும் கல்லறையிலும் அடக்கம் செய்ய எதிர்ப்பு நிலவி மயானங்கள் மூடப்படும் பட்சத்தில் முஸ்லிம்களின் மையவாடிகள் திறக்கப்படும் என கூறியிருக்கிறார். இது பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அக்கட்சியின் நெல்லை மாவட்ட சமூக வலைதளம் ஒன்றின் பக்கத்தில் வெளியாகி இருக்கும் இச்செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. 

click me!