அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ பூங்கோதை மேலப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் எவ்வாறு 9 பேரையும் அனுமதித்தார்? என்று கேள்வி எழுப்பினார். ஆலங்குளம் தொகுதியில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கிறது என்றும் வேறோரு தொகுதியில் இருப்பவர்களை ஆலங்குளத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தனிமைபடுத்தி வைக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் தீவிரமாகி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோயாளிகள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூரி விடுதி ஒன்றை தனிமை வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களுடன் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான பூங்கோதை ஆலடி அருணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று கடந்த 4 நாட்களுக்கு முன்பாக மரணமடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் வாகனம் ஒன்றின் மூலம் மேலப்பாளையம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் முறைப்படி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவிலை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஊர் திரும்பிய 9 பேரையும் காவல்துறையினர் கடையநல்லூர் ரயில்வேகேட் அருகே வைத்து சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தனர். இதையடுத்து 9 பேரையும் ஆலங்குளம் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்க வைத்து தனிமை சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பாவூர்சத்திரத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றின் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தகவலறிந்த முன்னாள் அமைச்சரும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான பூங்கோதை ஆலடி அருணா சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவருடன் கல்லூரி அருகே இருக்கும் அத்தியூத்து, ஆண்டிபட்டி, முத்துகிருஷ்ணபேரி என சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கல்லூரி விடுதி முன்பாக திரண்டனர். கல்லூரி விடுதியை தனிமை வார்டாக மாற்றக் கூடாது என்றும் மீறினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் மக்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய எம்.எல்.ஏ பூங்கோதை மேலப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் எவ்வாறு 9 பேரையும் அனுமதித்தார்? என்று கேள்வி எழுப்பினார். ஆலங்குளம் தொகுதியில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கிறது என்றும் வேறோரு தொகுதியில் இருப்பவர்களை ஆலங்குளத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தனிமைபடுத்தி வைக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். அனுமதி பெறாமல் 9 பேரும் மேலப்பாளையம் சென்றிருந்தால் கைது செய்யுங்கள் எனக்கூறி காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
9 பேரையும் தனது தொகுதிக்குட்பட்ட கல்லூரியில் அனுமதித்தால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில் ஆலங்குளம் மக்களுக்கும் நோய் பரவ வாய்ப்பிருப்பதால் அவர்களை கடையநல்லூர் பகுதியிலேயே தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்களுடன் சேர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தனது தொகுதி எதிர்க்கட்சியின் வசம் இருப்பதால் இது நடக்கிறதா? எனவும் விமர்சனம் செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய அரசு அதிகாரிகள் 9 பேரையும் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ மற்றும் 15 பேர் காவலர்கள் வழக்கு பதிந்துள்ளனர். கொரோனா பாதித்த பகுதிக்கு சென்றவர்களை தனது தொகுதியில் தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.