நெல்லையில் ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் கருப்பு சேலை அணிந்து திடீர் தர்ணா; பரபரப்பான மாநகராட்சி!!

By Dhanalakshmi G  |  First Published Oct 20, 2022, 3:31 PM IST

எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்று நெல்லை மாநகராட்சி மேயரைக் கண்டித்து ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் கருப்பு சேலை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் திடீரென கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் பிஎம்.சரவணன் அறிவித்தார். திமுக வழக்கறிஞர் ஒருவர் மறைவு காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். 

இந்த நிலையில் மாநகராட்சி 7வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திரா மணி கருப்பு சேலை அணிந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து அவர் அலுவலகத்தின் நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து கையில் பதாகை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Latest Videos

undefined

அந்த பதாகையில், பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் ஸ்டாலின் ஆட்சியில் கடந்த எட்டு மாதங்களாக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நெல்லை மாநகராட்சி நிறைவேற்றவில்லை இதனால் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.  இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவரை மேயரிடம் அழைத்து சென்றனர். பின்னர் தனது கோரிக்கையை மேயரிடம் கவுன்சிலர் இந்திராமணி தெரிவித்தார். தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இந்திராணி தெரிவித்தார். 

இது குறித்து இந்திராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, '' கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் முறையிட்டு வருகிறோம். ஆனால், எந்தப் பணிகளும் எனது பகுதியில் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு நான் பதில் சொல்ல முடியவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்க விட்டால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்'' என்றார். ஆளுங்கட்சி கவுன்சிலரே மேயரை கண்டித்து போராட்டம் நடத்திய சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

click me!