சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவைக்கு முன்னுரிமை.. வேகமெடுக்கும் பணிகள்..!

By vinoth kumarFirst Published Jul 16, 2023, 3:43 PM IST
Highlights

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

வந்தே பாரத் ரயில் சேவையில் சென்னை - நெல்லை ரயில் வழித்தடத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 23 ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில், சென்னை-கோவை, சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை-நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 இதுதொடர்பாக ஆய்வு பணிகளை மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங்;- சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை அக்டோபர் மாதம் இறுதியிலோ அல்லது நவம்பர் மாதத்திலோ தொடங்கும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் கூறிய காலக்கெடுவை விட ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்காக தெற்கு நகரத்தில் தேவையான உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தற்போதைய பணிகள் முடிவடைந்து தெற்கு மண்டலத்திற்கு அடுத்த வந்து பாரத் ரயில் சேவையை ஒதுக்க ரயில்வே போர்டு (RB) ஒப்புதல் அளித்தால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கலாம் என தெற்கு ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிய வருகின்றன.

வந்தே பாரத் ரயில் சேவையில் சென்னை - நெல்லை ரயில் வழித்தடத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நெல்லை மக்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லையில் இருந்து காலை 6 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்தடையும் என்றும் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் நெல்லைக்கு வந்தடையும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயில்கள் 10 மணி நேரத்திற்கு மேலாகிறது. ஆனால் வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் 2 அல்லது இரண்டரை மணி நேரம் மிச்சமாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
 

click me!