நாங்குநேரி அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு முதியவர் உடலை வைத்து சாலை மறியல்

By SG Balan  |  First Published Mar 11, 2024, 12:05 AM IST

ஒவ்வொரு முறையும் ஊரில் உயிரிழப்பு ஏற்படும் போதும் உடலைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.


நாங்குநேரி அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பொதுமக்கள் இறந்த முதியவர் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ளது ஆயர் குளம் கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவ் ஊருக்கு தெற்கே உள்ள குளத்தின் அருகில் இம்மக்களின் சுடுகாடு அமைந்துள்ளது.  ஆனால் அந்த சுடுகாட்டிற்கு உரிய பாதை ஏதும் அமைத்து தரப்படாததால் பல ஆண்டுகளாக நீரோடை மற்றும் தனியார் நிலங்கள் வழியே இறந்தவர்கள் உடலை ஏறியூட்ட எடுத்துச் சென்று வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தனியார் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவ்வழியாக இறந்தவர்கள் உடலை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடலுடன் இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அப்போது உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்தும் உறுதி அளித்த அதிகாரிகள் இன்னும் சுடுகாட்டுக்கு முறையான பாதை அமைத்து கொடுக்க வில்லை. இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்த போதும் அவ்வப்போது அதிகாரிகள் தலையிட்டு சமாதானப்படுத்தி காலம் கடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆயர் குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து (75) என்ற முதியவர் வயோதிகம் காரணமாக இன்று உயிரிழந்தார்.  அதனை அடுத்து உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்திய பின் அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.  அப்போது சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர கோரி சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் இசக்கிமுத்துவின் உடலை  நடுரோட்டில் வைத்துக் கொண்டு சாலையில்  அமர்ந்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் அவர்களுடன் வழக்கம் போல சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சுடுகாட்டிற்கு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். 

அதன் பின் அங்குள்ள வயலிலிருந்து கழிவுநீர் செல்லும் வாய்க்கால் வழியே முட்புதர்களுக்கு இடையே மிகவும் சிரமப்பட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றனர்.  சிறிது தொலைவில் அந்த வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியேறி நெல் வயல்களுக்கு இடையே தத்தளித்துக் கொண்டு இசக்கி முத்துவின் உடலை சுமந்து எடுத்துச் சென்றனர்.

மேலும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் வயல் வரப்புகளின் வழியே தள்ளாடியவாறு சென்றனர். இவ்வாறு ஒவ்வொரு முறையும் ஊரில் உயிரிழப்பு ஏற்படும் போது உடல்களைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் இருப்பதாகவும் பல முறை கோரிக்கை விடுத்தும் சமூக நீதி பேசும் திமுக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பட்டியல் இன மக்களின்  இந்த அவல நிலை தொடர்வதாகவும் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர். 

அங்கு வயல் அறுவடை பணிகள் முடிந்த பின்னர் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அமைக்கப்படா விடில் அடுத்த முறை இறந்தவரின் உடலை வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

click me!