சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது . அரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சங்கரநாராயணராக சிவ பெருமான் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.
'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாத வாயில மண்ணு' என்று ஒரு சொல்வார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு அரிய நிகழ்வு நடந்த இடம் தான் சங்கரன்கோவில். சிவனும், விஷ்ணுவும் ஒன்று தான் என பார்வதி இந்த உலகிற்கு உணர்த்திய நாள் ஆடி பவுர்ணமி தினம். இந்த நாளே சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் பெயரில் ஊர் பெயரும் இருப்பதும் இந்நகரின் சிறப்பு.
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய கோவில் நகரங்களில் ஒன்று சங்கரன்கோவில். இங்கு சிவன் - பார்வதி, சங்கரலிங்கம்- கோமதி அம்பாளாக எழுந்தருளியுள்ளனர். ஒரு காலத்தில் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என தேவருலகில் சண்டை நிலவி வந்தது. இதனால் சிவனை வழிபடும் சைவர்களுக்கும் , விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்களுக்கும் பெரும் வாய் போரே உருவானது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பார்வதி அம்பாள் சிவனை நோக்கி தவமிருந்தாள். ஆடி மாதம் பவுர்ணமி தினத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக அம்பாள் தனது தவத்தை தொடங்கினாள். தவத்தில் உருகிய சிவபெருமான், 11வது நாள் அன்று அம்பாளுக்கு தனது உடம்பில் பாதி அரியும், பாதி சிவனுமாக "சங்கர நாராயணராக" காட்சியளித்தார். அதன்பின்னர் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்க, சங்கரலிங்கமாவும் காட்சி கொடுத்தார் .
ஆடி பவுர்ணமி உத்ராடம் நட்சத்திரத்தன்று இந்த நிகழ்வு நடந்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று 12 நாட்கள் சங்கரன்கோவிலில் இதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா, 11ம் நாள் மாலை 6 மணிக்கு சிவன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 12ம் நாள் இறுதி நாளாக கோமதி அம்பாள், சங்கரலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.
இந்த வருடம் கடந்த 3 ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 11ம் நாள் நடைபெறும் ஆடித்தபசு நேற்று ( 13 ) மாலை 5 மணிக்கு நடைபெற்றது . தபசு மண்டபத்தில் அம்பாள் தவக்கோலத்தில் இருந்தநிலையில் , மாலை 6 மணிக்கு சங்கரநாராயணராகவும், இரவு 12 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாகவும் சிவபெருமான் காட்சியளித்தார் .
இதே போல நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சின்னசங்கரன்கோவிலிலும் இந்த விழா கோலாகலமாக நடந்தது . தாமிரபரணி நதிக்கரையில் வைத்து கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார் .