இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட வந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர் துணிச்சலுடன் அடித்து விரட்டியுள்ளனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (68 ).இவரது மனைவி செந்தாமரை (65 ). சண்முகவேல் அங்குள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார் . இவர்களுக்கு இரண்டு மகன்கள் , ஒரு மகள் .அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகவேல் வீட்டின் முன்பு அமர்ந்து செய்தித்தாள் வாசித்து கொண்டிருந்தார் . அப்போது பின் பக்கமாக வந்த கொள்ளையன் ஒருவன் அவர் கழுத்தில் துண்டை கட்டி இறுக்கியுள்ளான் . இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகவேல் கூச்சல் போட்டுள்ளார் . சத்தம் கேட்டு வெளியே வந்த செந்தாமரை கொள்ளையனை கையில் கிடைத்த பொருள்களை கொண்டு எறிந்து தாக்கி உள்ளார் . உடனே மற்றொரு கொள்ளையன் வந்து செந்தாமரையை தாக்கியுள்ளான். அதற்குள் சுதாரித்து எழுந்த சண்முகவேல் இரு கொள்ளையர்களை நாற்காலியை கொண்டு அடித்து விரட்டினர் . எனினும் செந்தாமரை கழுத்தில் இருந்த 4 சங்கிலியை கொள்ளயர்கள் திருடி சென்றனர் .கொள்ளையர்களோடு சண்டையிட்டதில் செந்தாமரைக்கு கையில் சிறிய காயம் ஏற்பட்டது .
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வீட்டில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் வயதான தம்பதியர்கள் இருவரும் துணிச்சலுடன் சண்டையிடும் காட்சிகள் பதிவாகி இருந்தது . இருவரையும் காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர். அதில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க கடையம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து உள்ளனர் .
வயதான தம்பதியினர் துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .