உள்ளாட்சித் தேர்தல்: கட்சிக்காரர்களுக்கு டெபாசிட் காலி.. 90 வயதில் பட்டையைக் கிளப்பிய பாட்டி..!

By Asianet Tamil  |  First Published Oct 13, 2021, 9:44 AM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்றிருக்கிறார், 90 வயது மூதாட்டி.
 


ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போதுமே ருசிகரமாகவே இருக்கும். கிராம ஊராட்சித் தலைவர் பதவி, கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சிகளுக்கு வேலை கிடையாது. இந்தப் பதவிகளுக்குப் போட்டியிடுவோர் எல்லோருக்குமே சுயேட்சைச் சின்னம்தான் வழங்கப்படும். கட்சிக்காரர்கள் போட்டியிட்டாலும் சுயேட்சை சின்னம்தான். ஆனால், கட்சிக்காரர்கள் போட்டியிடும்போது தான் எந்தக் கட்சி என்பதையும், கட்சித் தலைவர்கள் படத்துடன் சுயேட்சைச் சின்னத்தைப் பயன்படுத்தி வாக்கு கேட்பார்கள். அந்த வகையில் கட்சிக்காரர்கள் கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளை அதிகம் வெற்றி பெறுவதும் நடக்கும்.
அதையும் தாண்டி கிராமத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் கட்சி பேதங்களைத் தாண்டி வெற்றி பெறுவதும் உண்டு. அந்த வகையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள். இந்த வயதில் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டபோதே, எல்லோரும் வாயைப் பிளந்தார்கள்.
தேர்தலிலும் அந்த மூதாட்டி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தேர்தலில் பதிவான வாக்குகளில் 1558 வாக்குகளைப் பெற்றுள்ளார் பெருமாத்தாள். ஆனால், வெற்றி பெற்றதோ ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில். கட்சி அடையாளத்துடன் போட்டியிட்டவர்கள் உட்பட அனைவரையும் டெபாசிட்டை இழக்கச் செய்து, பெருமாத்தாள் வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற பெருமாத்தாள் முதுமை மாறாத புன்சிரிப்புடன் வெற்றிச் சான்றிதழைப் பெற்றபோது கூடியிருந்த அனைவருமே கைத்தட்டி மகிழ்ந்தார்கள். அதோடு பெருமாத்தாளுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர். 

click me!