
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் சரவணராஜ் (41). இவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் அருகே சாலையில் மற்றொரு வழக்கறிஞரான சாம் ராபின் (28) என்பவருடன் சரவணராஜ் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரவணராஜை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை தடுக்க வந்த சாம் ராபினையும் மர்ம கும்பல் தாக்கினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சென்னை பிரமுகருக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சனையால் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.