நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 51 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவின் சரவணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, திமுக தலைமை இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், திமுக தலைவர் ஸ்டாலின் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் சரவணனின் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
கடந்த சில தினங்களாக நெல்லை மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. தொடர்ந்து, மேயர் சரவணனை மாற்றக் கோரி, கடந்த ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு முறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையிலான நெல்லை திமுக கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தியிருந்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலினையும் அவர்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கவுன்சிலர்களுக்கும், மேயருக்கும் இடையேயான பிரச்சினை தீர்க்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார். இருப்பினும், பிரச்சினை ஓய்ந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து மேயரை மாற்றக்கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்மையில் கடிதம் அனுப்பினர். அதில், மேயர் சரவணன் மீது ஊழல், கமிஷன் உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டிருந்தன. மேலும், மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கவுன்சிலர்களின் வார்டு பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்த மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வுமான அப்துல் வகாப் பரிந்துரையின் பேரிலேயே மேயர் பதவியை சரவணன் கைப்பற்றியிருந்தார். ஆனால், அண்மைக்காலமாகவே வகாபுக்கும், சரவணனுக்கும் இடையே டேர்ம்ஸ் சரியில்லை என கூறப்படுகிறது. ஆனால், கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் வகாபின் ஆதரவாளர்களாகவே அறியப்படுகின்றனர். எனவே, மேயரை மாற்றக் கோரி நெல்லை கவுன்சிலர்கள் அமைச்சர் நேருவை சந்தித்தற்கும், உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியததன் பின்னணியிலும் அவர் இருக்கலாம் என நெல்லை அரசியல் களத்தில் ஒரு டாக் ஓடுகிறது.
இதுகுறித்து நெல்லை திமுக கவுன்சிலர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, “இரண்டு முறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மேயர் மீது புகார் அளித்துள்ளோம். திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்னைகளை மேயரிடம் எடுத்துக் கூறினால் அந்த கோரிக்கைகளை அவர் புறக்கணித்து வருகிறார். எம்.எல்.ஏ., அப்துல் வஹாப் பரிந்துரை செய்ததால்தான் அவர் மேயர் ஆனார். ஆனால், தற்போது, எம்.எல்.ஏ.வின் பேச்சைக் கூட அவர் கேட்பதில்லை.” என்கிறார்.
ஜவுளி துறையில் இந்தியாவை உலக மையமாக மாற்ற பிரதமர் உறுதி ஏற்றுள்ளார் - மத்திய அமைச்சர் தகவல்
தொடர்ந்து பேசிய அந்த பெயர் குறிப்பிட விரும்பாத கவுன்சிலர், மேயர் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே ஆதயம் பெறும் நோக்கத்தோடு டெண்டர் விடுகிறார். இதனால், நகர் முழுவதும் கட்டுமான பணிகள் தரமில்லாமல் உள்ளன என்றும் குற்றம் சாட்டுகிறார். சமீபத்தில், ஒரு பெண் கவுன்சிலர் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் சில முறைகேடுகள் குறித்து விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் விசாரணைக்கு மனு அளித்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பின்னணியில், தனது சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு மேயர் சரவணன் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. ஸ்டாலின் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் சரவணனின் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.