நெல்லை அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் காவலராக பணியாற்றி வருபவர் அந்தோணி ராஜ். தினமும் அதிகாலையில் இவர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இன்று ரயில்வே பீட்டர் சாலையில் ரோந்தில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் ரைஸ் மில் அருகே குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டிருக்கிறது.
உடனே சத்தம் வந்த பகுதிக்கு அவர் சென்று பார்த்திருக்கிறார். அங்கு ஒரு காலி இடத்தில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் கிடந்திருக்கிறது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தோணி ராஜ் குழந்தையை உடனே தன் கைககளால் தூக்கினர். குழந்தை இருந்த பகுதியைச் சுற்றி யாரும் இல்லாத நிலையில் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார்.
அங்கு குழந்தையை செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர். பச்சிளம் ஆண் குழந்தையை வீசி சென்றது யார்? என்ன காரணத்திற்கு வீசினார்கள்? தகாத உறவில் பிறந்ததால் நடந்த சம்பவமா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.