ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று குலசேகரமுடையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது கல்லிடைக்குறிச்சி நகரம். இங்கு குலசேகரமுடையார் சமேத அறம்வளர்த்த நாயகி அம்பாள் கோவில் இருக்கிறது. இது நூற்றாண்டு பழமையான கோவிலாகும். கடந்த 1982 ம் ஆண்டு இந்த கோவிலின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை கடத்தப்பட்டது. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட இந்த சிலை திருட்டு வழக்கு, பின்னர் 1984 ம் ஆண்டு சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி முடித்து வைக்கப்பட்டது.
இந்த சிலை திருட்டு வழக்கை மீண்டும் கையிலெடுத்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு தீவிர விசாரணைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருக்கும் அருங்காட்சியத்தில் இருப்பதை கண்டுபிடித்தது. பின்னர் பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து நடராஜர் சிலையை அங்கிருந்து மீட்டனர்.
அருங்காட்சியக அதிகாரி ராபின்சனின் சொந்த செலவில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தது நடராஜர் சிலை. பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலமாக கடந்த 13 ம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கல்லிடைகுறிச்சியில் இருக்கும் குலசேகரமுடையார் கோவிலுக்கு நடராஜர் சிலை கொண்டுவரப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்திற்கு வருகை தந்த நடராஜர் சிலை மேளதாளங்கள் உடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் வழிநெடுகிலும் பூக்களைத் தூவி நடராஜர் சிலையை உற்சாகமாக வரவேற்றனர்.
சுமார் 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலைக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் நுழைவாயில், உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய பகுதிகளில் 4 கண்காணிப்பு கேமராக்களும், புதிய இரும்பு கதவுகளும், அவசர ஒலி கருவிகளும் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரின் தீவிர முயற்சியால் சிலை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.