கேரிபேக்கிற்கு தனியாக கட்டணம் வசூலித்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த இளைஞருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் என்கிற இளைஞர். இவர் கடந்த 2018ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் இருக்கும் ஒரு கடையில் பொருட்கள் வாங்கியிருக்கிறார். அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டு பொருள்களை பெற்றபோது கேரி பேக்கில் வைத்து தராமல் கையில் கொடுத்து இருக்கின்றனர். இதனால் அப்துல்ரகுமான் கேரிபேக் தருமாறு கடை ஊழியர்களிடம் கேட்டு இருக்கிறார்.
undefined
அதற்கு அவர்கள் கேரிபேக் வேண்டும் என்றால் தனியாக ஏழு ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனே அப்துல் ரகுமான் உங்கள் நிறுவனத்தின் விளம்பரதிற்கு தனியாக எதற்கு பணம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். மேலும் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி இது தவறு என்றும் அந்த ஊழியர்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஊழியர்கள் அது அவர்கள் நிறுவனத்தின் கொள்கை என்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்துல் ரகுமான் பணம்கொடுத்து கேரி பேக்கை தனியாக வாங்கியிருக்கிறார். மேலும் பணம் கொடுத்ததை வீடியோவாக அப்துல்ரகுமான் பதிவுசெய்துள்ளார். அதன்பிறகு திருநெல்வேலியில் இருக்கும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அப்துல் ரகுமான் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தார்..
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இது நிறுவனத்தின் தவறுதான் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விளம்பரம் அச்சடிக்கப்பட்ட பையை கொடுத்தால் இலவசமாகத்தான் கொடுக்க வேண்டுமே தவிர அதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் விளம்பரம் இல்லாமல் கேரிபேக் கொடுத்தால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கலாம் என்று நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் கேரிபேக்கிற்காக தனியாக ஏழு ரூபாய் வாங்கியதற்காக அப்துல் ரகுமானிற்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரம் வழங்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.