எல்லாம் போச்சே... நெல்லையில் கனமழையால் இடிந்து விழுந்த வீடுகள்... தவிக்கும் பொதுமக்கள்

By SG BalanFirst Published Dec 18, 2023, 5:21 PM IST
Highlights

நெல்லை மேலப்பாளையம் பாரதி நகர் பகுதியிலும் ஒரு வீடு முழுதும் இடிந்து நாசமாகியுள்ளது. கே.டி.சி. நகர் பகுதியிலும் ஒரு வீடு மழையால் முற்றிலும் இடிந்து விழுந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாநகரப் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பல இடங்களில் கனமழை காரணமாக வீடுகளில் சேதம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 24 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபத்தான நிலையில், கரையோரம் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை கனமழை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்

இச்சூழலில், நெல்லை டவுண் கருப்பன்துறை பகுதியில் வெள்ளத்தால் வீடு ஒன்று இடிந்து விழுந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நல்வாய்ப்பாக அந்த வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதேபோல மேலப்பாளையம் பாரதி நகர் பகுதியிலும் ஒரு வீடு முழுதும் இடிந்து நாசமாகியுள்ளது. கே.டி.சி. நகர் பகுதியிலும் ஒரு வீடு மழையால் முற்றிலும் இடிந்து விழுந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் குறைந்தது ஐந்து வீடுகள் முழுதும் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனிடையே நெல்லை மூலைக்கரைப்பட்டியில் இருந்து நான்குநேரி செல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதனால், அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு அவசர கால கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு

click me!