தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருக்கும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களுக்காக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருக்கும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. மேலும் விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு தென்படுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியிருக்கும் வானிலை மையம் தமிழகத்தில் ஆங்காங்கே மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என குறிப்பிடுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம், காரைக்குடி, திருமயம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், சிவகிரி, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.