தமிழகத்தின் புதிய வரைபடம் தற்போது வெளியாகி இருக்கிறது. புதியதாக உருவாகிய தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் பழைய மாவட்டங்களில் இருந்து தனியாக பிரிந்திருக்கும் வரைபடம் எல்லைக்கோடுகளுடன் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதியதாக 6 மாவட்டங்களை உருவாக்கி முதலவர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு முதலில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டது. பின் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
அதே போல தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டங்களுக்கான தொடக்க விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் முதல்வர் தலைமையில் நடந்தது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தனிமாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அதற்கான அரசாணை தமிழக அரசு சார்பாக அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தின் புதிய வரைபடம் தற்போது வெளியாகி இருக்கிறது. புதியதாக உருவாகிய தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் பழைய மாவட்டங்களில் இருந்து தனியாக பிரிந்திருக்கும் வரைபடம் எல்லைக்கோடுகளுடன் வெளியாகியுள்ளது.