நெல்லை அருகே பச்சிளம் பெண் குழந்தையை விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கிறது ஆறுமுகம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசு இருதயராஜ்(43). இவரது மனைவி புஷ்பலதா(35). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 3 ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இருதய ராஜ் கலக்கத்தில் இருந்துள்ளார். இதன்காரணமாக பச்சிளம் பெண் குழந்தையை விற்க முடிவெடுத்தார்.
அதன்படி ஆலங்குளத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு பெண்குழந்தையை விற்றுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க, அவர் காவல்துறையில் அளித்த புகாரின்படி இருதயராஜ் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அதில் குழந்தை தங்கராஜிடம் விற்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு நெல்லையில் இருக்கும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இதுபோல வேறு எதுவும் குழந்தை விற்கப்பட்டுள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.