ஆசியாவிலேயே முதன்முதலாக கட்டப்பட்ட 'ஈரடுக்கு மேம்பாலம்'..! திருநெல்வேலியின் பெருமைமிகு அடையாளம்..!

By Manikandan S R SFirst Published Nov 15, 2019, 6:22 PM IST
Highlights

திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல, இப்பாலத்தில் இரண்டு அடுக்குகள் இருப்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' என்று பெயரிடப்பட்டது.

திருநெல்வேலி என்றதும் பெரும்பாலும் எல்லோரும் சட்டென்று நினைப்பது அல்வாவையும், அருவாளையும் தான். அதற்கு பிறகாக தாமிரபரணி ஆறு, நெல்லையப்பர் கோவில் போன்றவை நினைவுக்கு வரலாம். ஆனால் இவை அனைத்தையும் கடந்து ஆசிய அளவில் புகழ்பெற்ற ஒன்று திருநெல்வேலியில் அமைந்திருக்கிறது. ஆம்.. திருநெல்வேலியின் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' தான் அது!

'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்'.. இப்படி ஒரு பெயரை கேட்டதும் திருநெல்வேலி மக்களே ஒரு நிமிடம் குழப்பமடையலாம். அவர்களிடம் 'ரெட்டை பாலம்' என்று கூறினால் போதும், 'எங்க ஊர் பாலம் ல அது..' என்று உணர்ச்சிபொங்க கூறுவார்கள். திருநெல்வேலி சந்திப்பு அருகே இருந்த ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக கட்டப்பட்டது தான் இந்த ரெட்டை பாலம். 1969ம் ஆண்டு முதன்முதலாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதியால் பால வேலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 47 லட்சம் செலவில் நான்கு ஆண்டுகள் பணிகள் நடந்து முடிந்து 1973ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இப்பாலம் திறக்கப்பட்டது.

700 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் 26 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தனிச்சிறப்பு என்னவெனில் ஆசியாவிலேயே முதன்முதலாக ரயில்வே இருப்புப்பாதைக்கு மேலாக  கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் என்பதும் இந்தியாவிலேயே முதல்முறையாக கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பாலம் என்பதே ஆகும். இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல, இப்பாலத்தில் இரண்டு அடுக்குகள் இருப்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' என்று பெயரிடப்பட்டது. ஆனால் திருநெல்வேலி மக்கள் தங்கள் வட்டார வழக்கில் 'ரெட்டை பாலம்' என்று அழைக்க இப்போதும் வரையிலும் அதே பெயரில் தான் அறியப்படுகிறது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் 'வில்' வடிவில் கம்பீரமாக நிற்கும் இந்த ஈரடுக்கு மேம்பாலம் கடந்த 13 ம் தேதி தனது 46வது வயதை எட்டியிருக்கிறது. 45 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் வாகனங்களையும், மக்களையும் சுமந்து திருநெல்வேலி மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் இம்மேம்பாலம் எந்தவித பராமரிப்புகளும் இன்றி களையிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர். மழைகாலங்களில் நீர் தேங்கியும், ஒழுகியும் சேதமடைந்து இருக்கிறது. 

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் தற்போது சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் ரெட்டை பாலத்தையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாநகரத்தின் பெருமைமிகு அடையாளமாக திகழும் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' மீண்டும் புதுப்பிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் விருப்பமாக இருக்கிறது.

click me!