தலைவிரித்தாடிய கந்துவட்டிக் கொடுமை..! மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி..! நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

By Manikandan S R S  |  First Published Nov 14, 2019, 5:07 PM IST

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
 


நெல்லை மாவட்டம் மேலகருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண்குழந்தை மற்றும் இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கிருஷ்ணன் என்பவரிடம் 50 ஆயிரம் பணத்தை கடனாக அருள்தாஸ்  பெற்றிருக்கிறார். அதற்காக தனது காலிமனையை அடகு வைத்துள்ளார்.

Latest Videos

undefined

இந்தநிலையில் வாங்கிய கடனுக்கு அதிகமான வட்டியை அருள்தாஸ் செலுத்தி வந்திருக்கிறார். இரண்டு லட்சத்திற்கும் மேல் வட்டி மட்டுமே கட்டிவந்துள்ளார். அவரது தொழிலும் சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே வாங்கிய கடன் 50 ஆயிரமும் அதற்கு வட்டியாக மேலும் ஒரு லட்ச ரூபாயையும் கேட்டு கிருஷ்ணன் தொல்லை செய்திருக்கிறார். அருள்தாஸ் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணன், அவரை கட்டையால் தாக்கி செல்போனையும் பறித்துச் சென்றுள்ளார்.

இதன்காரணமாக மனஉளைச்சல் அடைந்த அருள்தாஸ், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசாரும், பொதுமக்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இதே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி ஒருவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

click me!