தற்போதைய அசாதாரண சூழலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்குப் பதிலாக திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஏ, பி, சி என 3 விதமான தேர்ச்சி கிரேடுகள் வழங்கலாம். குறைந்தபட்ச தேர்ச்சி என்ற சி கிரேடை அனைத்து தனித்தேர்வர்களுக்கும் வழங்கிவிடலாம். கொரோனா பேரிடர் கால சிறப்பு 10-ம் வகுப்பு தேர்வு சான்றிதழில் மாணவரின் பெயர், வயது, கிரேடு போன்றவற்றை வழக்கமான மதிப்பெண் சான்றிதழ் போல இடம்பெறச் செய்யலாம்.
கொரோனா பாதிப்பால் நிலவி வரும் அசாதாரண சூழலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டாம் எனவும் திருப்புதல் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம் என்றும் தமிழக அரசுக்கு கல்வி பாதுகாப்பு அமைப்பு யோசனை கூறியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வே.வசந்தி தேவி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மேல்நிலைக் கல்வியில் சேருவதற்கும் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வியில் சேருவதற்கும் 10-ம் வகுப்பு சான்றிதழ் அவசியம் என்பதால் எஸ்எஸ்எல்சி தேர்வை அவசியம் நடத்த வேண்டும் என்று நிலைப்பாட்டுக்கு தமிழக அரசு வந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த பேரிடர் காலத்தில் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படலாம். அதோடு சமூக பரவல் உருவாகலாம்.
undefined
அசாதாரண சூழலில் தமிழக அரசு பொது தேர்வை தவிர்த்த முன்னுதாரணங்கள் பள்ளிக் கல்வித் துறையில் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு வேலூரில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆங்கிலம் 2-ம் தாள் விடைத்தாள்கள் எரிந்தன. அப்போது, அந்த விடைத்தாள்கள் எழுதிய மாணவர்களின் ஆங்கிலம் முதல் தாள் மதிப்பெண் அல்லது மற்ற பாடங்களில் எடுத்த சராசரி மதிப்பெண் இதில் எது அதிகமாக இருந்ததோ, அந்த மதிப்பெண் வழங்கப்பட்டது. இதேபோன்று, கடந்த 2013-ம் ஆண்டு விழுப்புரம் செஞ்சி சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் காணாமல் போன சம்பவத்தில் முந்தைய நிகழ்வை முன்னுதாரணமாக கொண்டு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
அந்த அடிப்படையில், தற்போதைய அசாதாரண சூழலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்குப் பதிலாக திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஏ, பி, சி என 3 விதமான தேர்ச்சி கிரேடுகள் வழங்கலாம். குறைந்தபட்ச தேர்ச்சி என்ற சி கிரேடை அனைத்து தனித்தேர்வர்களுக்கும் வழங்கிவிடலாம். கரோனா பேரிடர் கால சிறப்பு 10-ம் வகுப்பு தேர்வு சான்றிதழில் மாணவரின் பெயர், வயது, கிரேடு போன்றவற்றை வழக்கமான மதிப்பெண் சான்றிதழ் போல இடம்பெறச் செய்யலாம். தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் எங்கள் அமைப்பின் யோசனையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.